பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பிற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்று விசிக தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில், கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் கடும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிப்பதாக தெரிவித்தார். சிறுமியின் பெற்றோருடன் காணொளி வாயிலாக தொடர்பு கொண்டு ஆறுதல் கூறியதாகவும் குறிப்பிட்டார்.
அவர் சுட்டிக்காட்டிய விவரங்களின்படி, மே 21 இரவு சிறுமி காணாமல் போன நிலையில், பின்னர் குளத்துக்கு அருகேயுள்ள தென்னந்தோப்பில் உடல் கண்டெடுக்கப்பட்டது. காவல்துறை விசாரணையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்ததாகவும், கார்த்திக் மற்றும் மோகன் என்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
கைது செய்யப்பட்ட இருவரையும் பிணையில் விடாமல், வழக்கை விரைந்து விசாரித்து கடும் தண்டனை வாங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தினார். மேலும், விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே வண்டிப்பாளையத்தில் 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதாக வரும் செய்தியையும் குறிப்பிட்டு, பாதிக்கப்பட்ட இரு குடும்பங்களுக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றார்.
காவல்துறையில் ‘சிங்கப்பெண்’ சிறப்பு படை உள்ளிட்ட திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இதுபோன்ற கொடுங்குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.





