அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் மூத்த மகன் டொனால்டு டிரம்ப் ஜூனியர் (48), தொழிலதிபரும் மாடலுமான பெட்டினா ஆண்டர்சன் (39) ஆகியோருடன் பஹாமாசில் தனியார் முறையில் திருமணம் செய்துள்ளார். இந்த நிகழ்வில் டிரம்ப் ஜூனியரின் ஐந்து பிள்ளைகள் உட்பட 50க்கும் குறைவானோர் மட்டுமே கலந்து கொண்டனர்.

டிரம்ப் ஜூனியர் முன்னதாக வனெசா என்பவரை திருமணம் செய்திருந்தார்; அவர்களுக்கு ஐந்து குழந்தைகள் உள்ளனர். அந்த திருமண உறவு 2018ஆம் ஆண்டு முறிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்பின் புளோரிடா மாநிலத்தின் பாம் பீச் பகுதியைச் சேர்ந்த பெட்டினா ஆண்டர்சனுடன் அவருக்கு காதல் உறவு ஏற்பட்டதாகவும், அது கடந்த ஆண்டு இறுதியில் வெளிச்சத்துக்கு வந்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து இருவரும் சட்டப்படி திருமணம் செய்ய முடிவு செய்தனர்.

இந்த திருமண விழா கரீபியன் தீவு நாடான பஹாமாசில் மூன்று நாள் நிகழ்வாக ஏற்பாடு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்பாடுகளை லூயிஸ் மில்லர் டிசைன் நிறுவனம் கவனித்ததாகவும் கூறப்படுகிறது. முதலில் வெள்ளை மாளிகையில் நடத்தலாம் என யோசித்தாலும், ஈரான் தொடர்பான பதற்றம் மற்றும் சர்வதேச நிலைமை காரணமாக தனியார் நிகழ்வாக பஹாமாசில் நடத்த முடிவு செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விழாவில் எரிக் டிரம்ப், இவாங்கா டிரம்ப், டிபனி டிரம்ப் உள்ளிட்ட நெருங்கிய குடும்பத்தினர் கலந்து கொண்டனர். ஈரான் போர் காரணமாக அதிபர் டிரம்ப் பங்கேற்கவில்லை என்றும், இந்த ஆண்டு இறுதியில் பெரிய அளவில் கொண்டாட திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.