சென்னை: ‘தினமலர்’ நாளிதழ் நிறுவனர் டி.வி.ராமசுப்பையர் (டி.வி.ஆர்.) அவர்களின் வாழ்க்கை வரலாறும் சாதனைகளும் இடம்பெறும் ‘பேசும் வரலாறு’ என்ற ஆவணப்படம், நேற்று மாலை 6:30 மணிக்கு தமிழ் ஜனம் டிவியில் ஒளிபரப்பானது.

அரை மணி நேரம் நீளமான இந்த ஆவணப்படம், பத்திரிகையை வெறும் செய்தி ஊடகமாக அல்லாமல் சமூக மாற்றத்திற்கான கருவியாகப் பயன்படுத்தியவராக டி.வி.ஆரை முன்னிறுத்துகிறது. 1908 அக்டோபர் 2-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பிறந்த அவர், இளமையிலேயே காந்தியக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காக செயல்பட்டதாக இதில் குறிப்பிடப்படுகிறது.

1946-ல் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் கொண்டு வரப்பட்ட கட்டாய கல்வித் திட்டத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க அவர் மேற்கொண்ட முயற்சிகள், மூன்று மாதங்களில் 50 பள்ளிகள் உருவாக காரணமானதாக ஆவணப்படம் பதிவு செய்கிறது. மேலும், 1951 செப்டம்பர் 6-ம் தேதி திருவனந்தபுரத்தில் தமிழ் அறிஞர் வையாபுரி பிள்ளை தொடங்கி வைத்த ‘தினமலர்’ நாளிதழின் தொடக்கமும், “எந்தக் கட்சியையும் சாராமல் தமிழர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதே முதன்மை” என்ற அவரது நிலைப்பாடும் இதில் இடம்பெற்றுள்ளன.

கன்னியாகுமரி இணைப்பு போராட்டத்தில் ‘தினமலர்’ முக்கிய பங்காற்றியதாகவும், விளம்பரத் தடை மற்றும் போலீஸ் அடக்குமுறை போன்ற அழுத்தங்களுக்கிடையிலும் துணிச்சலுடன் செயல்பட்டதாகவும் ஆவணப்படம் கூறுகிறது. 1956 நவம்பர் 1-ல் கன்னியாகுமரி தமிழகத்துடன் இணைந்த பின்னர் நாளிதழ் நெல்லைக்கு மாற்றப்பட்டதும், ‘உள்ளூர் செய்திகளுக்கே முதலிடம்’ என்ற கொள்கையுடன் அங்கு டெலிபிரின்டர் வசதி அறிமுகப்படுத்தப்பட்டதும் குறிப்பிடப்படுகிறது. 1967-ல் தி.மு.க. அரசு காலத்தில் அரசு விளம்பரங்கள் நிறுத்தப்பட்டதால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, 1977-ல் எம்.ஜி.ஆர். முதல்வரான பின்னர் சீரானதாகவும் இதில் சொல்லப்படுகிறது.

மேலும், தமிழ் நாளிதழ்களில் முதன்முறையாக ஆப்செட் அச்சு முறையை அறிமுகப்படுத்தி வண்ணமயமான பதிப்பை வெளியிட்டது, அரசு ஏற்கும் முன்பே தமிழ் எழுத்து சீர்திருத்தத்தை நாளிதழில் நடைமுறைப்படுத்தியது போன்றவை இடம் பெற்றுள்ளன. நெல்லை–குமரி–திருவனந்தபுரம் ரயில் திட்டம் உள்ளிட்ட மக்கள் நலத் திட்டங்களுக்காக அவர் நீண்டகாலம் போராடியதும், 1984 ஜூலை 21-ல் அவர் மறைந்ததும், 2011-ல் மத்திய அரசு சிறப்பு அஞ்சல் தலை வெளியிட்டு கவுரவித்ததும் ஆவணப்படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆவணப்படத்தை இன்று முதல் தமிழ் ஜனம் டிவியின் யூடியூப் தளத்திலும் காணலாம்.