ஈரானுடன் தொடர்பான அமைதி ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியில் மீண்டும் பாதுகாப்பான கப்பல் போக்குவரத்தை உறுதி செய்யும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது போர் தொடுத்ததையடுத்து, ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியதாக கூறப்படுகிறது. மேலும், அமெரிக்க கடற்படை முற்றுகையை தடுக்க அந்தப் பகுதியில் ஈரான் கடல் கண்ணிவெடிகளை புதைத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

போர் முடிவுக்கு வரும் வகையில் பேச்சு நடந்து வரும் நிலையில், போர் நிறுத்த ஒப்பந்தம் அதிகாரப்பூர்வமாக கையெழுத்தானதும், பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் தலைமையில் 40க்கும் மேற்பட்ட நாடுகள் இணைந்த சர்வதேச கூட்டுப்படை கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் ஈடுபட உள்ளது.

இதற்காக ஜிப்ரால்டர் கடற்கரையில் நிறுத்தப்பட்டுள்ள பிரிட்டனின் ஆர்.எப்.ஏ. ‘லைம் பே’ கப்பலில் நூற்றுக்கணக்கான கடற்படை வீரர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். கப்பலில் வெடிபொருட்கள் மற்றும் சோனார் தொழில்நுட்பம் கொண்ட அதிநவீன நீர்மூழ்கி ட்ரோன்களும் ஏற்றப்பட்டு வருகின்றன.

இந்தக் கப்பல் விரைவில் எகிப்தின் சூயஸ் கால்வாய் வழியாக பாரசீக வளைகுடாவை நோக்கி புறப்பட ஆயத்தமாகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.