லக்னோ: மத்திய அரசின் ‘உமீத்’ இணையதளத்தில் பதிவேற்றப்பட்ட வக்ப் வாரிய சொத்து பதிவுகளில் தேவையான ஆதாரங்கள் இல்லை எனக் கூறி, உத்தர பிரதேச அரசு 31,328 ஆன்லைன் பதிவுகளை ரத்து செய்துள்ளது.

கடந்த ஆண்டு இறுதியில் வக்ப் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் வக்ப் சொத்துகளை ஆறு மாதங்களுக்குள் விரிவான தகவல்களுடன் பதிவு செய்ய ‘உமீத்’ இணையதளத்தை மத்திய அரசு தொடங்கியது. காலக்கெடுவுக்குள் பதிவு செய்யப்படாத சொத்துகள் சர்ச்சைக்குரியதாக கருதப்படும் என்றும், நீளம்–அகலம் மற்றும் புவிசார் குறிச்சொற்களுடன் இட விவரங்கள் கட்டாயம் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

சொத்து விவரங்களை பதிவேற்றுவதற்கான அவகாசத்தை நீட்டிக்கக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்ததைத் தொடர்ந்து, நாடு முழுவதும் பதிவேற்றப் பணிகள் தொடர்கின்றன.

இந்த நிலையில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உ.பி.யில் மொத்தம் 1,18,302 வக்ப் சொத்துகள் ‘உமீத்’ தளத்தில் ஆவணப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. பதிவேற்றப்பட்ட விவரங்களை வருவாய் துறை அதிகாரிகள் ஆவணங்களுடன் ஒப்பிட்டு சரிபார்த்து வருகின்றனர்.

சரிபார்ப்பின்போது சில சொத்துகளில், வக்ப் வாரிய ஆவணங்களில் உள்ள ‘கஸ்ரா’ (நிலப் புல எண்) மற்றும் இணையதளத்தில் சமர்ப்பிக்கப்பட்ட எண்கள் முரண்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் 31,328 பதிவுகள் ரத்து செய்யப்பட்டதுடன், தொடர்புடைய 31,192 வக்ப் கோரிக்கைகளும் முழுமையாக நிராகரிக்கப்பட்டன.