‘பசுவை இந்தியாவின் தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும்’ என்ற கோரிக்கைக்கு உத்தர பிரதேசத்தில் பல முஸ்லிம் அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்த கோரிக்கையை ஜமாயத் உலமா-இ-ஹிந்த் அமைப்பின் தலைவர் மவுலானா அர்ஷத் மதானி முன்வைத்துள்ளார்.
வட மாநிலங்களில் பசுவதை தொடர்பான நடவடிக்கைகள் கடுமையாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், மே 28-ல் பக்ரீத் பண்டிகை நடைபெற உள்ளது. இதையொட்டி பாதுகாக்கப்பட்ட விலங்குகளை பலியிடத் தடை விதிப்பதும், பொது இடங்களில் விலங்குகளை அறுப்பதற்கு கட்டுப்பாடுகள் விதிப்பதும் உள்ளிட்ட வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாட்டிறைச்சிக்காக பசுக்களை வாங்குவோர், விற்போர் மற்றும் மாட்டிறைச்சி வர்த்தகத்தில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க சட்ட விதிகள் இயற்றப்பட வேண்டும் என்றும் மதானி வலியுறுத்தியுள்ளார்.
இதற்கு ஆதரவாக அகில இந்திய முஸ்லிம் ஜமாத் அமைப்பின் தேசிய தலைவர் மவுலானா ஷஹாபுதீன் ரஸ்வி, இந்த விவகாரத்தில் முஸ்லிம் அமைப்புகளிடையே ஒருமித்த கருத்து உருவாக்கப்பட வேண்டும் என கூறினார். டெல்லியில் விரைவில் முஸ்லிம் அமைப்புகளின் கூட்டம் நடைபெற உள்ளதாகவும், அதில் கூட்டு மனு தயாரித்து பிரதமர் நரேந்திர மோடியிடம் சமர்ப்பிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
உ.பி.யில் இறைச்சி வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள அகில இந்திய குரேஷி ஜமாத்தின் தலைவர் சிராஜ் குரேஷி, மத்திய அரசு இந்த கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என கூறினார். இதனால் நாடு முழுவதும் பசுவதை தொடர்பான கொள்கைகளில் ஒரே மாதிரியான நடைமுறை உருவாகும் என்றும் அவர் தெரிவித்தார். இதே கருத்தை பல்வேறு முஸ்லிம் அமைப்புகளும் வலியுறுத்தியுள்ளன.





