சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) தலைவர் மற்றும் முதல்வர் விஜய், தன் அரசுக்கு ஆதரவு அளித்த கட்சிகளுடன் இணைந்து பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்திய தமிழக சட்டசபை தேர்தலில் த.வெ.க. 108 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தி.மு.க. கூட்டணியில் இருந்த காங்கிரஸ், வி.சி.க., கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் முஸ்லிம் லீக் ஆகியவை ஆதரவு அளித்ததால், த.வெ.க. தலைமையில் கூட்டணி அரசு அமைந்து விஜய் முதல்வரானார்.

த.வெ.க. வட்டாரங்களின் தகவலின்படி, இந்த பொதுக்கூட்டம் மூலம் ஆதரவு அளித்த கட்சிகளை த.வெ.க. கூட்டணி கட்சிகளாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வகையில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

த.வெ.க.க்கு முக்கிய நிகழ்ச்சியாக கருதப்படும் இந்த கூட்டம், பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்பே நடத்த திட்டமிடப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், கோவை சிறுமி பாலியல் வழக்கு மற்றும் மின் தடை தொடர்பான பிரச்னைகள் உள்ளிட்ட காரணங்களால் அது நடைபெறவில்லை.

இந்த பொதுக்கூட்டத்தில் த.வெ.க. கூட்டணிக்கு ‘மதச்சார்பற்ற சமூக நீதி கூட்டணி’ என்ற பெயர் சூட்ட திட்டமிடப்பட்டுள்ளதாக த.வெ.க. வட்டாரங்கள் தெரிவித்தன.