தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே 12ம் வகுப்பு பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், தர்ம முனீஸ்வரனுக்கு தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
வழக்கு விவரங்களின்படி, இயற்கை உபாதை கழிக்க சென்ற மாணவி பின்னர் காணாமல் போனார். தொடர்ந்து காட்டுப் பகுதியில் அவரது உடல் மீட்கப்பட்ட நிலையில், அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக விசாரணையில் தெரியவந்தது.
சட்டசபை தேர்தலுக்கு முன்பாக மார்ச் 10 அன்று நிகழ்ந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து போலீசார் தர்ம முனீஸ்வரனை கைது செய்து மதுரை சிறையில் அடைத்தனர்.
தூத்துக்குடி மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது; மொத்தம் 71 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். கடந்த இரண்டு மாதமாக நடந்த விசாரணை நிறைவடைந்த நிலையில், மே 25 அன்று நீதிபதி ப்ரீத்தா தீர்ப்பளித்து குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்தார்.





