ஹிந்து மக்கள் கட்சி மாநிலத் தலைவர் அர்ஜுன் சம்பத், திருவாரூரில் செய்தியாளர்களிடம் பேசும்போது “அரசியலில் யாருக்கும் வெட்கமில்லை” என்று குற்றம்சாட்டினார்.
புதிய முதல்வராக ஜோசப் விஜய் பொறுப்பேற்ற 15 நாட்களுக்குள் 40-க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்துள்ளதாகவும், கோவை, நாகை, விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
முந்தைய திமுக ஆட்சியில் இருந்த பிரச்சினைகள் தற்போதைய ஆட்சியிலும் தொடர்வதாக அவர் விமர்சித்தார். ஒரு பாட்டிலுக்கு கூடுதலாக வசூலிக்கப்படும் 10 ரூபாயை கட்டுப்படுத்த முடியவில்லை என்றும், போதைப்பொருளை ஒழிக்க முதல் கையெழுத்து போட்டும் பலன் இல்லை என்றும் தெரிவித்தார்.
கொலை சம்பவங்களுக்கு போதை காரணம் என கூறிய அவர், டாஸ்மாக் கடைகளை குறைப்பதால் பயன் இல்லை; கடைகளை மூட வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், விஜய் குறித்து முன்பு கூறப்பட்ட கருத்தை நினைவூட்டி, விசிகவை சேர்ந்த வன்னியரசுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டதை விமர்சித்து, அரசியல் வெட்கம் இழந்துவிட்டதாக மீண்டும் கூறினார்.





