சமையல் செய்யவில்லை அல்லது வீட்டு வேலைகளைச் செய்யவில்லை என்பதற்காக மட்டும் மனைவியை விவாகரத்து செய்ய முடியாது என்று மும்பை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மனைவியை பணிப்பெண்ணாகக் கருதக் கூடாது என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியது.
2002-ல் திருமணம் செய்துகொண்ட தம்பதியில், கணவர் விவாகரத்து கோரி மனுத் தாக்கல் செய்தார். சிஏ முடித்துள்ள அவர், மனைவி சமையல் செய்ய முடியவில்லை, முரட்டுத்தனமாக நடந்து கொள்கிறார், சொல் பேச்சு கேட்கவில்லை, வீட்டு வேலைகளைச் சரியாகச் செய்யவில்லை; இதனால் தனக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது என்றும், இது திருமணச் சட்டத்தின் கீழ் ‘கொடுமை’ எனக் கருதப்பட வேண்டும் என்றும் கூறினார்.
இதற்கு மனைவி தரப்பில், பாத்திரம் கழுவுதல், சுத்தம் செய்தல், சமையல் உள்ளிட்ட அனைத்து வீட்டு வேலைகளையும் தன்னைச் செய்ய வைத்ததாகவும், மீதமான உணவையும் உண்ண கட்டாயப்படுத்தியதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கில் குடும்ப நல நீதிமன்றம் 2010-ல் விவாகரத்து வழங்கியதுடன், ஜீவானம்சம் வழங்க மறுத்திருந்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டில், நீதிபதிகள் பாரதி டாங்ரே மற்றும் மஞ்சுஷா தேஷ்பாண்டே அமர்வு விவாகரத்து உத்தரவை ரத்து செய்தது.
திருமணம் என்பது சமமான நபர்களின் கூட்டணி; அது சேவை ஒப்பந்தம் அல்ல என்று நீதிபதிகள் கூறினர். சமையல், சுத்தம் போன்ற வீட்டு வேலைகளைச் செய்யத் தவறுவது மட்டும் மனரீதியான கொடுமையாக மாறாது என்றும், திருமணத்தின் ஆரம்ப நாட்களில் ஏற்படும் சாதாரண கருத்து வேறுபாடுகளை கொடுமை குற்றச்சாட்டுகளாக மிகைப்படுத்தக் கூடாது என்றும் தெரிவித்தனர். மேலும், மனரீதியான கொடுமை என்பது அவமானம், மனவேதனை போன்றவற்றை ஏற்படுத்தி திருமண உறவைத் தொடர முடியாத நிலையை உருவாக்கும் கடுமையான நடத்தையாக இருக்க வேண்டும்; பொதுவெளியில் அவமானப்படுத்துதல், வசைச்சொற்களால் திட்டுதல், பொய் குற்றச்சாட்டுகள் சுமத்துதல், தனிப்பட்ட சுதந்திரத்தை கட்டுப்படுத்துதல் போன்றவற்றை எடுத்துக்காட்டாக நீதிமன்றம் குறிப்பிட்டது.





