இந்தியாவுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (FTA) குறித்து கனடா பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார். இது கனடா தொழிலாளர்கள் மற்றும் வணிகங்களுக்கு முக்கியமான திருப்புமுனையாக அமையும் என்றும் அவர் கூறினார்.

இந்த அறிவிப்பு, இந்திய மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் மூன்று நாட்கள் அரசுமுறை பயணமாக கனடா சென்றுள்ள நிலையில் வெளியாகியுள்ளது. வர்த்தக ஒப்பந்தம் மற்றும் இருதரப்பு முதலீட்டு வாய்ப்புகள் குறித்து பேச, 100-க்கும் மேற்பட்ட இந்திய நிறுவன பிரதிநிதிகள் உடன் சென்றுள்ளனர்.

ஒட்டாவாவில் பியூஷ் கோயல், பிரதமர் கார்னியை சந்தித்து இருநாட்டு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். சந்திப்பு புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்த கார்னி, இதுவரை எட்டிய முன்னேற்றங்களை ஆய்வு செய்து, விரைவாக செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.

மேலும், எரிசக்தி, வேளாண் உணவு, தொழில்நுட்பம் மற்றும் கல்வி உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டதாக கார்னி கூறினார். தனது பதிவில் பியூஷ் கோயல், பிரதமர் மோடியின் வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், தொலைநோக்குச் சிந்தனையுடன் கூடிய கலந்துரையாடல்கள் நடத்தி, தொடரும் தடையற்ற வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை குறித்தும் ஆலோசித்ததாக தெரிவித்தார்.