மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டி, காவிரியை நம்பியிருக்கும் விவசாயிகளின் நலன்களை பாதுகாக்க வேண்டும் என முதல்வர் விஜய் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது நீர்த்தேக்கத்திற்கான ‘பூமி பூஜை’ நடத்தப்படும் என கர்நாடக அரசு அறிவித்திருப்பது, உச்சநீதிமன்றத் தீர்ப்பையும் காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணையையும் வெளிப்படையாக மீறும் செயல் என அவர் குறிப்பிட்டார். இதுகுறித்து கர்நாடக துணை முதல்வர் பொது வெளியில் தெரிவித்த கருத்துகள் தமிழகத்தின் லட்சக்கணக்கான விவசாயிகளிடையே கவலையை ஏற்படுத்தியதாகவும் கூறினார்.
காவிரி நதிநீர் பிரச்னை 30 ஆண்டுகளுக்கும் மேலான சட்டப் போராட்டத்திற்குப் பிறகே தீர்வு கண்டதாகவும், 2018 பிப்ரவரி 2-ஆம் தேதி உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தற்போது அமல்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் நினைவூட்டினார். காவிரி தீர்ப்பாயம் அனுமதித்த திட்டங்களின் பட்டியலில் மேகதாது இடம்பெறவில்லை; இதை உச்சநீதிமன்றத் தீர்ப்பும் உறுதிப்படுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.
இறுதி ஆணையில் குறிப்பாக அனுமதிக்கப்பட்ட திட்டங்களைத் தவிர, காவிரி அல்லது அதன் துணைநதிகளின் குறுக்கே புதிய திட்டங்களைத் திட்டமிடுவது தீர்ப்பில் தலையிடுவதற்குச் சமம் என முதல்வர் விஜய் வலியுறுத்தினார். கர்நாடக-தமிழக எல்லைக்கு மிக அருகில் 67.16 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட புதிய மேகதாது திட்டத்தை முன்மொழிவது தீர்ப்பை மீறும் செயல் மட்டுமல்ல; நடைமுறையில் உள்ள சுற்றுச்சூழல் சட்டங்களுக்கும் முரணாகும் எனவும் அவர் கூறினார்.
மேலும், தமிழகத்தின் கோரிக்கைகளைப் பரிசீலிக்காமல் மத்திய ஜல்சக்தி அமைச்சகமும் மத்திய நீர்வள ஆணையமும் கர்நாடகாவின் முன்மொழிவை ஏற்று பரிசீலித்து வருவது வியப்பளிப்பதாக அவர் குறிப்பிட்டார். தீர்ப்பாய இறுதி ஆணைக்கும் உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கும் முரணான விரிவான திட்ட அறிக்கையை நிராகரிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என்றும், கீழ்நோக்கி உள்ள மாநிலங்களின் ஒப்புதல் இன்றி எந்த புதிய திட்டத்தையும் மேற்கொள்ளக் கூடாது; தீர்ப்பை எவ்வகையிலும் மீறக்கூடாது என கர்நாடக அரசுக்கு அறிவுறுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.





