கின்ஷாஷா: காங்கோ ஜனநாயகக் குடியரசில் எபோலா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருவதால், ஆப்ரிக்க கண்டம் முழுவதும் எச்சரிக்கை நிலை உருவாகியுள்ளது. நாளுக்கு நாள் பரவல் தீவிரமடைவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
எபோலா வைரஸ் ரத்தம், வியர்வை, விந்து உள்ளிட்ட உடல் திரவங்களின் தொடர்பு மூலம் பரவுகிறது. இது கடுமையான நோயாகவும், உயிரிழப்பு அபாயம் அதிகமானதாகவும் கருதப்படுகிறது. தற்போது பரவுவது ‘புண்டிபுக்யோ’ என குறிப்பிடப்படும் உருமாறிய வகை என கூறப்படுகிறது.
இந்த வகைக்கு இதுவரை அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி அல்லது குறிப்பிட்ட மருந்து இல்லை என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. நிலைமையின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, இதை உலகளாவிய பொது சுகாதார அவசர நிலையாக அறிவித்து, மேலும் பரவாமல் தடுக்க உடனடி மற்றும் ஒருங்கிணைந்த சர்வதேச நடவடிக்கை தேவை என வலியுறுத்தியுள்ளது.
மேலும், காங்கோவின் அண்டை நாடுகள் உள்ளிட்ட 10 நாடுகளுக்கு பரவல் அபாயம் மிக அதிகம் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. அங்கோலா, புருண்டி, எத்தியோப்பியா, கென்யா, ருவாண்டா, தெற்கு சூடான், தான்சானியா, ஜாம்பியா ஆகிய நாடுகள் இதில் குறிப்பிடப்பட்டுள்ளன.
இந்த பரவல் அச்சம் காரணமாக, 4-வது இந்திய–ஆப்ரிக்க கூட்டமைப்பு உச்சி மாநாட்டை மத்திய அரசு ஒத்திவைத்துள்ளது. இந்திய விமான நிலையங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பாதிப்புள்ள ஆப்ரிக்க நாடுகளில் இருந்து வரும் அல்லது அந்நாடுகள் வழியாக பயணித்து வரும் பயணிகள் உடல்நலக்குறைவு ஏற்பட்டால் உடனடியாக விமான நிலைய சுகாதார அதிகாரிகளிடம் தெரிவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கிழக்கு காங்கோவின் இடூரி மாகாணத்தில் எபோலா அறிகுறியுடன் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 900-ஐ கடந்துள்ளது. காங்கோ தகவல் தொடர்பு அமைச்சகத்தின் தகவலின்படி, 904 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 119 பேர் உயிரிழந்துள்ளனர்.





