சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியான மே 4 அன்று தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்த கருத்துகளுக்கும், தற்போது அவர் மற்றும் தி.மு.க. தலைவர்கள் பேசும் பேச்சுகளுக்கும் தொடர்பில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் கூறினார்.

ராஜபாளையம் அருகே சேத்தூரில் நடைபெற்ற முன்னாள் பேரூராட்சி தலைவர் செல்லப்பிள்ளை படத்திறப்பு மற்றும் புத்தக வெளியீட்டு விழாவில் அவர் இந்த கருத்தை தெரிவித்தார்.

தமிழகத்தில் ஆட்சி மாறும்போது கட்சி மாறுவது வழக்கமாகிவிட்டதாகவும், ஆனால் கம்யூனிஸ்ட்கள் எப்போதும் கட்சி மாறுவதில்லை என்றும் சண்முகம் கூறினார். ஒரு கட்சியில் எம்.எல்.ஏ. ஆகி மறுநாளே வேறு கட்சியில் இணையும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் விமர்சித்தார்.

அ.தி.மு.க., தி.மு.க. இல்லாமல் புதியவர் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற மனப்போக்கு மக்களிடையே இருந்ததை தங்களாலும் கணிக்க முடியவில்லை என அவர் கூறினார். தனிப்பெரும் கட்சி என்ற முறையில் த.வெ.க. அரசு அமைக்க மார்க்சிஸ்ட் ஆதரவு அளித்ததாகவும், இல்லையெனில் ஆளுநர் ஆட்சி ஏற்பட்டிருக்கும் என்றும் தெரிவித்தார்.

பயிர் கடன் தள்ளுபடி அறிவிப்பில் கலந்த உணர்வுகள் இருக்கலாம் என கூறிய அவர், கம்யூனிஸ்ட்கள் ஆதரவை வாபஸ் பெறுவார்கள் என்ற பேச்சுகளை மறுத்தார். மக்கள் நலனை அடிப்படையாகக் கொண்டு தான் முடிவு எடுப்போம் என்றும், மே 4 அன்று புதிய அரசுக்கு ஆறு மாத அவகாசம் அளித்து செயல்பாட்டைப் பொறுத்து விமர்சிப்போம் என ஸ்டாலின் கூறியிருந்த நிலையில், இன்றைய பேச்சுகள் அதற்கு மாறாக இருப்பதாகவும் சண்முகம் குற்றம்சாட்டினார். மேலும் மேகதாது விவகாரத்தில் தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டம் கூட்ட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.