தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் ஆலங்கிணறு பகுதியைச் சேர்ந்த பூல்பாண்டியன் (75) என்பவர், யாசகத்தில் கிடைத்த பணத்தை சேமித்து பொதுநலனுக்காக வழங்கி வருகிறார். அவர் இதுவரை முதல்வர் நிவாரண நிதிக்காக வழங்கிய மொத்தத் தொகை ரூ.1 கோடியாகியுள்ளது.
மதுரை, நெல்லை, நாகர்கோவில் உள்ளிட்ட பல நகரங்களில் யாசகம் பெற்று வாழும் இவர், கிடைக்கும் பணத்தை சேமித்து சமூகப் பணிகளுக்கு செலவிடுவதில் ஆர்வம் கொண்டவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக தனது பகுதி பள்ளிகளுக்கு உதவி செய்ததாகவும், கொரோனா காலத்தில் மதுரைக்கு வந்து மாவட்ட ஆட்சியரிடம் ரூ.50,000 வழங்கியதாகவும் கூறப்படுகிறது. இதுபோல் பல மாவட்டங்களில் சில மாதங்கள் இடைவெளியில் ஆயிரங்கள், லட்சங்கள் என தொடர்ந்து வழங்கி வந்ததன் மூலம் மொத்தம் ரூ.1 கோடி அளவுக்கு நிதியுதவி செய்துள்ளார்.
மே 18 அன்று மதுரைக்கு வந்த அவர், மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் முதல்வர் நிவாரண நிதியாக ரூ.10,000 வழங்கினார். ஒரு வார இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அதே கூட்டத்திற்கு வந்து நேற்று மேலும் ரூ.10,000 வழங்கினார்.
ஒரே வாரத்தில் இவ்வளவு தொகை எப்படி கிடைத்தது என்ற கேள்விக்கு, தனது நிதியளிப்புகள் குறித்து செய்திகள் வெளியாவதால் பலர் ஆர்வத்துடன் பணம் தருவதாக அவர் தெரிவித்தார். கடந்த ஒரு வாரமாக மதுரை, நெல்லை, பெங்களூரு மார்க்கெட்களில் யாசகம் பெற்று இம்முறையும் ரூ.10,000 வழங்க முடிந்ததாகவும் கூறினார்.





