புதுடில்லி: நாட்டில் தற்போது 78 நாட்களுக்கு தேவையான கச்சா எண்ணெய் கையிருப்பில் இருப்பதால், தற்போதைய சூழலில் தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்பு இல்லை என்று மத்திய பெட்ரோலிய அமைச்சக அதிகாரிகள் பார்லிமென்ட் நிலைக்குழுவில் தெரிவித்துள்ளனர்.

மேற்காசிய போர் பதற்றம் காரணமாக கடல்சார் வர்த்தகத்தில் ஏற்பட்ட தாக்கங்கள் குறித்து, போக்குவரத்து, சுற்றுலா மற்றும் கலாசார துறைகளுக்கான பார்லிமென்ட் நிலைக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் இந்த விவரங்கள் முன்வைக்கப்பட்டன.

கூட்டத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள், சில பகுதிகளில் ரேஷன் முறையில் பெட்ரோலிய பொருட்கள் வழங்கப்படுவது மற்றும் சில இடங்களில் பெட்ரோல், டீசல் நிரப்ப நீண்ட வரிசையில் மக்கள் காத்திருப்பது குறித்து கேள்வி எழுப்பினர். போர் நீடிக்கும் எனத் தெரிந்திருந்தும் முன்னேற்பாடுகள் ஏன் செய்யப்படவில்லை என்றும் அவர்கள் கேட்டனர்.

இதற்கு பதிலளித்த அதிகாரிகள், மத்திய அரசு எடுத்த முயற்சிகளால் மேற்காசியாவில் நிறுத்தப்பட்டிருந்த 37 இந்திய கப்பல்களில் பெரும்பாலானவை நாட்டை வந்தடைந்துவிட்டதாக கூறினர். ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் 13 இந்திய எண்ணெய் கப்பல்கள் மட்டும் அப்பகுதியில் சிக்கியுள்ளதாகவும், தட்டுப்பாடு வராமல் தடுக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்தனர்.

இதனிடையே, வரவிருக்கும் காரிப் பருவ தேவைகளை சமாளிக்க உரங்களின் கையிருப்பும் போதிய அளவில் இருப்பதாக மத்திய உர அமைச்சக அதிகாரிகள் நிலைக்குழு உறுப்பினர்களிடம் விளக்கினர்.