மேகதாது வழக்கில் தமிழக அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்து, 2025 நவம்பரில் வழங்கப்பட்ட தீர்ப்பை மீண்டும் திறக்க மறுத்தது.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது பகுதியில் அணை கட்ட கர்நாடக அரசு முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில், அதற்கான திட்ட வரைவு அறிக்கை (DPR) தயாரிப்பு பணிகளில் அந்த மாநிலம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த DPR-க்கு எந்த அனுமதியும் வழங்கக்கூடாது என தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை நாடியது.

இதற்கிடையில், மேகதாது அணைக்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என கர்நாடக அரசும் மனு தாக்கல் செய்தது. தமிழகத்தின் நிலைப்பாட்டை ஆதரிக்கும் வகையில், புதுச்சேரி மற்றும் கேரள அரசுகளும் திட்டத்திற்கு எதிராக மனுக்கள் தாக்கல் செய்தன.

2025 நவம்பரில் வழங்கப்பட்ட உத்தரவில், அப்போதைய தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு, கர்நாடகாவின் DPR மீது எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என குறிப்பிட்டது. மேலும், காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்று குழு ஆகியவை உள்ள நிலையில், அவை வழங்கும் பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டு மத்திய நிர்வாக ஆணையம் முடிவு எடுக்க வேண்டும்; தன்னிச்சையாக முடிவு எடுக்கக் கூடாது என தெரிவித்தது.

இந்த தீர்ப்பை மறுபரிசீலிக்க கோரி தமிழக அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு, மனுவின் உள்ளடக்கங்களையும் இணைக்கப்பட்ட ஆவணங்களையும் பரிசீலித்தபோதும், 2025 தீர்ப்பை மீளாய்வு செய்ய போதுமான முகாந்திரம் இல்லை எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தது.