மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வு வினாத்தாள் கசிந்ததாகக் கூறப்படும் வழக்கில், சி.பி.ஐ. அதிகாரிகள் 11 பேரை கைது செய்துள்ளனர். இதில் மஹாராஷ்டிரா மாநிலம் லாத்தூரைச் சேர்ந்த வேதியியல் ஆசிரியர் சிவ்ராஜ் மொடெகாவ்கர் என்பவரும் அடங்குகிறார்.
சிவ்ராஜ், RCC மற்றும் ரேணுகாய் என்ற பெயர்களில் பயிற்சி மையங்களை நடத்தி வருவதாக விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவருக்கு சுமார் 1,500 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் இருப்பதாக சி.பி.ஐ. அதிகாரிகள் கூறினர்.
அவரது மொபைல் போனை பறிமுதல் செய்து ஆய்வு செய்தபோது, தேர்வு நடைபெறுவதற்கு முன்பே நீட் வினாத்தாள் அவருக்கு அனுப்பப்பட்டிருந்தது தெரிய வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். அவர் சிக்கியதையடுத்து, மோசடி கும்பலின் பிற உறுப்பினர்கள் தலைமறைவாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தலைமறைவானவர்கள் சென்னையில் பதுங்கியிருக்கலாம் என சி.பி.ஐ.க்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால் டெல்லி மற்றும் சென்னை அணிகள் இணைந்து தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.





