அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, பாகிஸ்தான் மண்ணில் இருந்து கட்டவிழ்க்கப்படும் எல்லை தாண்டிய பயங்கரவாதம் தான் இந்தியாவின் முக்கிய கவலை என்றும், அந்த கவலை நியாயமானதே என்றும் டில்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

டில்லியில் நடைபெறும் ‘குவாட்’ நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்க ரூபியோ நான்கு நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ளார். இந்தப் பயணத்தின் போது அவர் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை தனித்தனியாக சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சு நடத்தினார்.

இந்தியா–பாகிஸ்தான் உறவு மற்றும் சமூக வலைதளங்களில் இந்தியர்களுக்கு எதிராக பரப்பப்படும் இனவெறி பேச்சுகள் உள்ளிட்ட கேள்விகளுக்கும் ரூபியோ பதிலளித்தார். அமெரிக்கா–ஈரான் இடையே ஏற்பட்ட மோதலைத் தீர்க்கும் முயற்சியில் பாகிஸ்தான் மத்தியஸ்தராக செயல்பட்டதாகவும், அதுகுறித்து இந்தியா அமெரிக்காவிடம் எந்த விவாதமும் நடத்தவில்லை; ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

ஆனால் பாகிஸ்தான் தொடர்பாக இந்தியாவின் கவலை வேறு வகையில் இருப்பதாக ரூபியோ குறிப்பிட்டார். பாகிஸ்தான் மண்ணில் இருந்து உருவாகும் பயங்கரவாதத்தை இந்தியா தொடர்ந்து சுட்டிக்காட்டி வருவதாகவும், இந்தியாவின் அச்சம் பயங்கரவாதத்தை மையப்படுத்தியே இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.