தவெக கட்சியில் ‘குதிரை பேரம்’ நடைபெறுகிறது என்ற குற்றச்சாட்டுகளை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் திங்கட்கிழமை மறுத்தார். தவெக தரப்பில் அத்தகைய நடவடிக்கை எதுவும் இல்லை என்று அவர் தெரிவித்தார்.

முதல்வர் விஜயின் செயல்பாடுகளை புரிந்துகொண்ட பிறகு பலர் இணைவது மகிழ்ச்சி அளிப்பதாக கூறிய அவர், அரசியல் பேரம் யார் நடத்தியது என்பதை நாடே அறிந்துள்ளதாகவும் குறிப்பிட்டார். திமுக ஆதரவுடன் அரசு அமைப்பேன் என கூறியவர் யார் என்ற கேள்வியையும் அவர் முன்வைத்தார்.

ராஜினாமா என்பது தனிநபர் விருப்பம்; அதை மற்றவர்கள் தீர்மானிக்க முடியாது என்றும் அவர் கூறினார். ஆறு மாத அவகாசம் தருவதாக முன்பு கூறிய திமுக இப்போது ஏன் விமர்சிக்கிறது எனவும் கேள்வி எழுப்பினார்.

சட்டம்-ஒழுங்கை சீர்செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர், குற்றங்கள் நிகழும் போது முதல்வர் உடனடி நடவடிக்கை எடுத்து வருவதாகவும், காவல்துறை மூலம் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், அதிமுகவில் ஜனநாயகம் இல்லை என குற்றம்சாட்டிய அவர், எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா படங்கள் இல்லாமல் பாராட்டுக்கூட்டம் நடத்தியதாக ஒரு முன்னாள் முதல்வரை விமர்சித்தார்.