நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) மீது உச்ச நீதிமன்றம் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி, கடந்த கால தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்ளாதது வருத்தமளிப்பதாக தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வான நீட், இந்த ஆண்டு மே 3-ஆம் தேதி நடைபெற்றது. இதில் 22 லட்சத்துக்கும் அதிகமானோர் தேர்வெழுதிய நிலையில், தேர்வுக்கு முன்பே சமூக ஊடகங்கள் வழியாக வினாத்தாள் கசிந்ததாக புகார்கள் எழுந்தன.
கசிவு நிரூபணமானதைத் தொடர்ந்து, மே 12-ஆம் தேதி நடந்துமுடிந்த தேர்வை ரத்து செய்வதாக என்.டி.ஏ. அறிவித்து, ஜூன் 21-ஆம் தேதி மறுதேர்வு நடத்தப்படும் என தெரிவித்தது. இதனிடையே டில்லி, ஜெய்ப்பூர், குருகிராம், நாசிக், புனே உள்ளிட்ட நகரங்களில் சோதனைகள் நடத்தப்பட்டு, இடைத்தரகர்கள் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டது.
லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிய நிலையில், நீட் நடத்தும் பொறுப்பில் இருந்து என்.டி.ஏ-வை நீக்கி புதிய தன்னாட்சி அமைப்பை உருவாக்க வேண்டும் என அகில இந்திய மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய மருத்துவர்கள் முன்னணி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மேலும், வினாத்தாள் கசிவைத் தடுக்க நீட்டை முழுமையாக கணினி வழித் தேர்வாக நடத்த வேண்டும் என்றும் கோரப்பட்டது.
இந்த மனுக்கள் நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா மற்றும் அலோக் ஆராதே அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, 2024-ல் ஏற்பட்ட கசிவுக்குப் பிறகு உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட கண்காணிப்புக் குழு அளித்த பரிந்துரைகள் என்ன ஆனது, அந்த குழுவின் தற்போதைய நிலை என்ன என்பதைக் குறித்து என்.டி.ஏ. விரிவான பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்கு நகல்களை மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வழங்கவும் உத்தரவிட்டு, விசாரணையை மே 29-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.





