சென்னை வானிலை மையம், மே 26 முதல் ஜூன் 1 வரை தமிழகத்தின் சில இடங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவித்துள்ளது.
அறிக்கையில், மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவுவதாக கூறப்பட்டுள்ளது. இதன் தாக்கத்தால் இன்று (மே 26) சில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இந்த எச்சரிக்கை கோவை, திருப்பூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகள் உட்பட நீலகிரி, ஈரோடு, சேலம், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களுக்கு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே 26 முதல் மே 29 வரை அதிக வெப்பநிலையும் அதிக ஈரப்பதமும் நிலவும் சூழலில், கடலோர தமிழகத்தின் சில இடங்களில் அசவுகரியம் ஏற்படலாம் என்றும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.
மீனவர்களுக்கு வழங்கப்பட்ட எச்சரிக்கையில், தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மே 26 முதல் மே 29 வரை மணிக்கு 40–50 கி.மீ. வேகத்தில், இடையிடையே 60 கி.மீ. வரை சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால், இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.





