புதுடில்லி: தேசிய நெடுஞ்சாலை 83-ல் நாகப்பட்டினம்–தஞ்சாவூர் இடையிலான திருவாரூர் பைபாஸில் நான்கு வழிச்சாலை அமைக்க ரூ.1,427.61 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வெளியிட்ட அறிக்கையில், இந்த இணைப்பு திட்டம் திருச்சி, கோவை போன்ற முக்கிய தொழில்நகரங்களையும் காரைக்கால், நாகப்பட்டினம் போன்ற துறைமுக நகரங்களையும் சிறப்பாக இணைக்கும் என்றும், இதன் மூலம் அந்தப் பகுதியில் பொருளாதார நடவடிக்கைகள் வலுப்பெறும் என்றும் கூறினார்.

அடியக்கமங்கலம்–தண்டலை இடையிலான புறவழிச்சாலை அத்திப்புலியூர், ஆண்டிபாளையம், கிடாரம்கொண்டான், பள்ளிவாரமங்கலம், பெரும்புகளூர், இளவங்கார்குடி, ஆனைவடபதி காலனி உள்ளிட்ட பகுதிகள் வழியாக செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திட்டம் நிறைவு பெற்ற பிறகு திருவாரூரில் போக்குவரத்து நெரிசல் குறையும்; சுமார் 15 நிமிடம் பயண நேரம் மிச்சமாகும் என்றும் கூறப்பட்டுள்ளது. மக்கள் நெருக்கடி மற்றும் வணிகச் செயல்பாடு அதிகமுள்ள பகுதிகளில் இருந்து வாகனங்களை திசைதிருப்புவதால் சாலை பாதுகாப்பும் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், மாநில நெடுஞ்சாலை 23 மற்றும் 65 மேம்பாட்டுக்கு இது துணைபுரியும்; தியாகராஜ சுவாமி கோயிலுடன் இணைப்பையும் வலுப்படுத்தும். இதன் மூலம் உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் பயண சுலபம் அதிகரிக்கும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.