சென்னை: சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து பின்னர் த.வெ.க.வில் இணைந்த மூன்று பேருக்கு, எந்த பதவியை தேர்வு செய்வது என்பதை முடிவு செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

த.வெ.க. மூத்த நிர்வாகிகள் கூறுகையில், பெருந்துறை ஜெயகுமார், மதுராந்தகம் மரகதம் குமரவேல், தாராபுரம் சத்யபாமா ஆகியோர் அ.தி.மு.க. சார்பில் வெற்றி பெற்ற பின்னர் பதவியை விட்டு விலகி த.வெ.க.வில் சேர்ந்ததாக தெரிவித்தனர்.

தேர்தலுக்கு முன்பே அ.தி.மு.க. மாவட்ட செயலர்கள் 16 பேரிடம் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு நடத்தியதாகவும், அப்போது யாரும் வர தயாராக இல்லை என்றும் கூறப்படுகிறது. தற்போது அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள குழப்பத்தைத் தொடர்ந்து, ஆதவ் அர்ஜுனா தரப்பு மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்கியதாகவும் வட்டாரங்கள் சொல்கின்றன.

தேர்தலில் செலவழித்த தொகையை வழங்க த.வெ.க. மேலிடம் ஒப்புக் கொண்டதாகவும், இடைத்தேர்தலில் அதே தொகுதியில் சீட் வேண்டுமா அல்லது வாரிய தலைவர் பதவி வேண்டுமா என மூவரிடமும் கேட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதற்கு, மீண்டும் சீட் வேண்டும்; வெற்றி பெற்றால் அமைச்சர் பதவி வேண்டும் என அவர்கள் கோரியதாகவும், அந்த கோரிக்கையை மேலிடம் விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது.

இடைத்தேர்தல் நெருக்கத்தில், சர்வே அடிப்படையில் சீட் வழங்கப்படும் என மேலிடம் தெரிவித்ததால், சீட் கிடைக்காவிட்டால் என்ன செய்வது என்ற குழப்பத்தில் மூவரும் வாரிய தலைவர் பதவியை ஏற்கலாமா என யோசிக்கத் தொடங்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, யோசித்து முடிவை தெரிவிக்குமாறு தலைமை கூறியதாகவும், மேலும் இரு முன்னாள் அமைச்சர்கள் உட்பட ஏழு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுடனும் பேச்சு நடப்பதாகவும் வட்டாரங்கள் தெரிவித்தன.