சென்னை: மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு நிலை மோசமடைந்துள்ளதாக கூறிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி, முதல்வர் விஜயை நோக்கி ‘சிங்கப்பெண் அதிரடிப்படை எங்கே போனது?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
தனது அறிக்கையில், கோவை சூலூர் பகுதியில் சிறுமிக்கு நடந்ததாக கூறப்படும் கொடுமையின் அதிர்ச்சியில் இருந்து மக்கள் மீளுவதற்குள், விழுப்புரம் மாவட்டத்தில் மற்றொரு சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை நடந்ததாக குறிப்பிட்டார். மேலும், சூலூர் சிறுமியின் தாய்க்கு தெரிவிக்காமல் அவசரமாக உடல் எரிக்கப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே சிறுவன் கொலை செய்யப்பட்டதாகவும், கோவையில் இளம்பெண் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாகவும் அவர் சுட்டினார். அதேபோல், முதல்வரின் தொகுதியான பெரம்பூரில் போதை கும்பல் 13 வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்து அட்டூழியம் செய்ததாகவும் கூறினார்.
குற்றச் சம்பவங்கள் அதிகரித்து பொதுமக்கள் அச்சத்தில் இருக்கும் நிலையில், கண்துடைப்புக்காக போலீஸ் அதிகாரிகள் கூட்டம் நடத்தி பொதுவான அறிக்கைகள் விடுவது ஏற்க முடியாது என அவர் தெரிவித்தார். பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க அரசு என்ன ஆக்கப்பூர்வ நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதை முதல்வர் நேரடியாக பதில் சொல்ல வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.





