தமிழகத்தின் புதிய சட்டம்-ஒழுங்கு காவல் துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) நியமனத்திற்கான மூன்று பேர் கொண்ட பரிந்துரை பட்டியலுக்கு யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (யுபிஎஸ்சி) ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் புதிய டிஜிபி நியமனம் விரைவில் நடைபெறும் நிலை உருவாகியுள்ளது.
இந்த பட்டியலை இறுதிப்படுத்தும் முக்கிய உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை செயலாளர், பொதுப்பணிச் செயலாளர் உள்ளிட்ட உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பங்கேற்க தமிழக தலைமைச் செயலாளர் சாய் குமார், உள்துறை செயலாளர் மணிவாசன் ஆகியோர் தில்லி சென்றிருந்தனர். தகுதியான அதிகாரிகளின் பணி பதிவேடுகள் மற்றும் சீனியாரிட்டி அடிப்படையில் விரிவான ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுபிஎஸ்சி ஒப்புதல் அளித்த பட்டியலில் ஐபிஎஸ் அதிகாரிகளான ராஜீவ் குமார், சந்தீப் ராய் ரத்தோர், மகேஷ்குமார் அகர்வால் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இந்த பரிந்துரை பட்டியல் விரைவில் தமிழக அரசுக்கு முறையாக அனுப்பப்படும் என கூறப்படுகிறது.
அதன்பின், இந்த மூவரில் ஒருவரை தமிழகத்தின் புதிய சட்டம்-ஒழுங்கு டிஜிபியாக அரசு அறிவிக்கும். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.





