வாஷிங்டன்: அமெரிக்கா-ஈரான் மோதல் விரைவில் முடிவுக்கு வரும் என்ற உலக நாடுகளின் எதிர்பார்ப்பு, இரு தரப்பின் சமீபத்திய நடவடிக்கைகள் மற்றும் கருத்துகளால் குறைந்து வருகிறது.

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய போரை நிறுத்துவதற்கான முயற்சிகள் தொடர்கின்றன. தற்போது தற்காலிக போர் நிறுத்தம் அமலில் உள்ளது. ஆனால் நிரந்தர போர் நிறுத்தம் உள்ளிட்ட விவகாரங்களைப் பற்றிய முதல்கட்ட பேச்சுவார்த்தை உடன்பாடு இன்றி முடிந்ததால், அடுத்த கட்ட பேச்சுக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

புதுடில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, ஈரானுடன் “நல்ல உடன்பாடு” எட்ட அமெரிக்கா விரும்புவதாகவும், அது சாத்தியமில்லையெனில் “வேறு வழியில்” விவகாரத்தை கையாள வேண்டியிருக்கும் என எச்சரிக்கும் தொனியில் தெரிவித்தார். இது பேச்சுவார்த்தை சூழலை கடினப்படுத்தும் வகையில் பார்க்கப்படுகிறது.

இதற்கு முன், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ஈரானுடன் ஒப்பந்தம் செய்வதில் அவசரப்பட வேண்டாம் என அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டதாகவும், இரு தரப்பும் தேவையான நேரம் எடுத்துக் கொண்டு ஒப்பந்தத்தை சரியான முறையில் வடிவமைக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கிடையில், ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் எஸ்மாயில் பாகேய், பல தலைப்புகளில் பேச்சு நடந்தபோதும் சில முன்னேற்றங்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிலைக்கு நெருங்கிவிட்டதாக பொருள் கொள்ள முடியாது எனவும் கூறினார். மேலும், போர் நிறுத்தம் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி தொடர்பான அமெரிக்க முடக்கம் குறித்தே தற்போது கவனம் செலுத்தப்படுவதாகவும், சர்ச்சைக்குரிய அணுசக்தி விவகாரங்கள் இப்போது விவாதிக்கப்படவில்லை எனவும் ஈரான் தெரிவித்துள்ளது. முரண்பாடுகள் நீடிப்பதால், அமைதி ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என்ற நம்பிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.