சென்னை: நடப்பு கல்வியாண்டிலேயே 9ம் வகுப்பு மாணவர்களுக்கு 3வது மொழியை கட்டாயமாக்கும் சி.பி.எஸ்.இ. சுற்றறிக்கையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய கல்வி அமைச்சகத்திடம் தமிழக பா.ஜ. முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

தனது அறிக்கையில், ஏப்ரலில் சி.பி.எஸ்.இ. 6ம் வகுப்பில் இருந்து மூன்று மொழிகள் கட்டாயம் என்றும், அதில் இரண்டு மொழிகள் இந்திய மொழிகளாக இருக்க வேண்டும் என்றும் அறிவித்ததை நினைவூட்டினார். இந்தியாவின் பல்வகை இலக்கிய, கலாசார மரபுகளை சிறுவயதிலேயே அறிய உதவும் என்பதால் அந்த முடிவை தானும் வரவேற்றதாக தெரிவித்தார்.

மேலும், ஏப்ரலில் வெளியான அறிவிப்பில் 9ம் வகுப்பு சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு 3வது மொழியை கட்டாயமாக்குவது 2029–30 கல்வியாண்டில் இருந்து மட்டுமே அமலுக்கு வரும் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்ததாக அவர் கூறினார்.

ஆனால், மே 15 அன்று அனைத்து இணைப்பு பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்ட புதிய சுற்றறிக்கையில், நடப்பு கல்வியாண்டிலேயே 9ம் வகுப்புக்கு 3வது மொழி கட்டாயம் என்றும், ஜூலை முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அண்ணாமலை குறிப்பிட்டார். 6ம் வகுப்பிலேயே மாணவர்கள் தங்கள் விருப்ப மொழியை தேர்வு செய்துள்ள நிலையில், திடீர் மாற்றம் தமிழக பெற்றோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியதாகவும் கூறினார்.

குறுகிய காலத்தில் இன்னொரு புதிய மொழியை கற்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது மாணவர்களுக்கு தேவையற்ற மனஅழுத்தத்தை ஏற்படுத்தி, மொத்த கல்வித் திறனை பாதிக்கக்கூடும் என அவர் எச்சரித்தார். ஆகவே, முன்பு அறிவித்தபடி 2029–30 கல்வியாண்டிலிருந்து மட்டுமே நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மத்திய கல்வி அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.