தர்மசாலாவில் நடந்த தகுதிச்சுற்று-1 போட்டியில் குஜராத்தை 92 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக பைனலுக்கு முன்னேறியது. டாஸ் வென்ற குஜராத் கேப்டன் சுப்மன் கில் பந்துவீச்சை தேர்வு செய்தார்; அர்ஷத் கானுக்கு பதிலாக இடது கை வேகப்பந்து வீச்சாளர் குல்வந்த் கெஜ்ரோலியா அணியில் சேர்க்கப்பட்டார்.

பெங்களூரு இன்னிங்ஸை வெங்கடேஷ் ஐயர் அதிரடியாகத் தொடங்கினார்; 7 பந்தில் 19 ரன் எடுத்த நிலையில் வெளியேறினார். பின்னர் விராட் கோலி, தேவ்தத் படிக்கல் இணைந்து ரன் வேகத்தை உயர்த்தி, பவர் பிளே முடிவில் அணியை 76/1 என்ற நிலைக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஹோல்டர் ஓவரில் இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

அதன்பின் கேப்டன் ரஜத் படிதார், குர்ணால் பாண்ட்யா ஜோடி ஆட்டத்தை முழுமையாக பெங்களூரு பக்கம் திருப்பியது. 15வது ஓவரில் குல்வந்த் கெஜ்ரோலியா வீசிய 5 நோ-பால்களுடன் அந்த ஓவரில் மொத்தம் 28 ரன் சேர்க்கப்பட்டது. ரபாடா பந்தில் குர்ணால் (28 பந்தில் 43) வெளியேறினாலும், படிதார் 33 பந்தில் 93 ரன் (5 பவுண்டரி, 9 சிக்சர்) விளாசி பெங்களூருவை 20 ஓவரில் 254/5 என்ற பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றார்.

255 ரன் இலக்கைத் துரத்திய குஜராத் தொடக்கத்திலேயே தடுமாறியது. சாய் சுதர்சன் 14 ரன்னில் ‘ஹிட் விக்கெட்’ முறையில் ஆட்டமிழந்தார்; சுப்மன் கில் 2 ரன்னில் போல்டானார். பட்லர் 29 ரன் எடுத்தாலும் நிலைமை மாறவில்லை. இறுதியில் குஜராத் 19.3 ஓவரில் 162 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி, பெங்களூருவின் பைனல் நுழைவை உறுதி செய்தது.