தமிழக அரசியலில் எழுந்த ‘குதிரை பேரம்’ சர்ச்சை தொடர்பாக காங்கிரஸ் கட்சிக்குள் கருத்து வேறுபாடு வெளிப்படையாகத் தோன்றியுள்ளது. எம்.பி.க்கள் மாணிக்கம் தாகூர் மற்றும் ஜோதிமணி வெளியிட்ட அறிக்கைகள் ஒன்றுக்கொன்று முரண்பட்டதாக அமைந்துள்ளன.
அ.தி.மு.க.வைச் சேர்ந்த நான்கு எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு உடனடியாக தமிழக வெற்றிக் கழகத்தில் (த.வெ.க.) இணைந்தனர். இதை சுட்டிக்காட்டி, தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் ‘குதிரை வேகத்தில் குதிரை பேரம் நடக்கிறது’ என குற்றஞ்சாட்டினார்.
இதற்கு பதிலளித்த மாணிக்கம் தாகூர், எம்.எல்.ஏ.க்கள் பதவியை ராஜினாமா செய்து வெளிப்படையாகவே த.வெ.க.வில் இணைந்துள்ளதாக கூறி, இதில் ஏன் இவ்வளவு எதிர்வினை என கேள்வி எழுப்பினார்.
ஆனால் ஜோதிமணி வெளியிட்ட அறிக்கையில், த.வெ.க. தேர்ந்தெடுக்கும் அனைத்து வழிமுறைகளையும் காங்கிரஸ் ஆதரிக்க முடியாது என்றும், குதிரை பேர அரசியலை காங்கிரஸ் கட்சிக்குள் இருந்து யார் நியாயப்படுத்தினாலும் அது தவறு என்றும் தெரிவித்தார். தமிழகத்தில் ஆதரித்து, தமிழகத்திற்கு வெளியே எதிர்க்கும் இரட்டை நிலைப்பாட்டை காங்கிரஸ் எடுக்க முடியாது என்றும் அவர் கூறினார்.
இதையடுத்து, இரு எம்.பி.க்களையும் ஆதரிக்கும் தரப்பினர் சமூக வலைதளங்களில் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி, கண்டன பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.





