2026 ஜூன் மாதத்திற்கான 9.91 டிஎம்சி காவிரி நீரை தமிழகத்திற்கு வழங்குமாறு கர்நாடகாவுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்ற ஆணைப்படி பிலிகுண்டுலுவில் நீர் விடுவிப்பை உறுதிசெய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 51வது கூட்டம் மே 26 அன்று புதுடில்லியில் நேரடியாகவும் காணொலி வாயிலாகவும் நடைபெற்றது. தமிழக அரசு அதிகாரிகள் தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி மூலம் இதில் பங்கேற்றதாக அரசு செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கூட்டத்தில், ஜூன் மாத ஒதுக்கீட்டின்படி பிலிகுண்டுலுவில் நீர் திறப்பை நடைமுறைப்படுத்த வேண்டும் என தமிழக தரப்பு வலியுறுத்தியது. மேலும், கர்நாடகா “மிகை நீர்” என கூறி கணக்கில் சேர்க்க வேண்டும் என்ற வாதத்தை தமிழக தரப்பு ஏற்க முடியாது என்றும், சேமிக்க முடியாமல் வெளியேற்றிய நீரை திட்டமிட்ட வழங்கலாகக் கருத முடியாது என்றும் தெரிவித்தது.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பின்படி மே 26 அன்று தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கும் என்றும், மழை இயல்பான அளவில் இருக்கும் என்ற கருத்தையும் தமிழக தரப்பு சுட்டிக்காட்டியது. கர்நாடக அணைகளுக்கு வரும் நீர் வரத்தையும் கருத்தில் கொண்டு, ஜூன் மாதத்திற்கான 9.91 டிஎம்சி நீரை உறுதிசெய்ய ஆணையத்தை வலியுறுத்தியது.
இந்த விவாதங்களுக்குப் பிறகு, ஜூன் மாதத்தில் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய 9.91 டிஎம்சி நீரை திறக்க கர்நாடகாவுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.





