தமிழகம் மற்றும் புதுச்சேரியின் சில பகுதிகளில் இன்று முதல் மே 30 வரை இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அறிக்கையில், நேற்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரத்தில் 8 செ.மீ. மழை பதிவானதாக கூறப்பட்டுள்ளது.
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சியும், மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மற்றொரு வளிமண்டல சுழற்சியும் நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் ஏற்பட்ட சில மாற்றங்களால், நேற்று தொடங்க வேண்டிய தென்மேற்கு பருவமழை ஓரிரு நாட்கள் தாமதமாக தொடங்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோடை வெயிலின் உச்சமாக கருதப்படும் கத்திரி வெயில் காலம் நாளையுடன் நிறைவடைய உள்ளதாகவும், அதே நேரத்தில் இன்று முதல் மே 30 வரை தமிழகம், புதுச்சேரியில் வெப்பம் இயல்பை விட 3 டிகிரி செல்ஷியஸ் வரை உயர வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே, நேற்று மாலை நிலவரப்படி தமிழகம், புதுச்சேரியில் 10 இடங்களில் வெயில் சதமடித்ததாக தெரிவிக்கப்பட்டது. சென்னை மீனம்பாக்கம், திருத்தணி, வேலூர் ஆகிய இடங்களில் தலா 41.5 டிகிரி செல்ஷியஸ் (106°F) வெப்பம் பதிவானது.





