ஆலப்புழா: கேரளாவில் அரசு மருத்துவமனையில் நடந்த கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 19 வயது இளம்பெண் ஒருவர் கழிப்பறையில் குழந்தையை பெற்றெடுத்து, அதை ஜன்னல் வழியாக வெளியே வீசியதாக கூறப்படுகிறது.

ஆலப்புழா மாவட்டம் ஹரிப்பாடு பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில், வயிற்றுவலி காரணமாக அந்த பெண் அனுமதிக்கப்பட்டார். ஆனால் உடல் பரிசோதனைக்கு அவர் மறுத்ததால், கர்ப்பம் இருக்கலாம் என மருத்துவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்த அவர் நேற்று அதிகாலை கழிப்பறைக்கு சென்ற நிலையில், சிறிது நேரத்தில் அழுகுரல் கேட்டதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் கழிப்பறை பின்புறம் தெருநாய்களின் சத்தமும் அதிகரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து மருத்துவமனை ஊழியர்கள் அப்பகுதியில் சோதனை செய்தபோது, பச்சிளம் பெண் குழந்தை வீசப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. குழந்தை மீட்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டதாகவும், சரியான நேரத்தில் நடவடிக்கை எடுத்ததால் உயிர் காப்பாற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

திருமணம் ஆகாத நிலையில் குழந்தை பெற்றதால், கழிப்பறை ஜன்னல் வழியே குழந்தையை வீசியதாக கூறப்படுகிறது. தாயும் சேயும் ஆலப்புழா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் தொடர்பாக போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.