நாட்டின் பல பகுதிகளில் சட்டவிரோத ஊடுருவல் மற்றும் அதனால் ஏற்படுவதாக கூறப்படும் ‘இயல்புக்கு மாறான’ மக்கள்தொகை மாற்றங்களை ஆய்வு செய்ய, மத்திய அரசு உயர்நிலை குழுவை அமைத்துள்ளது.

கிழக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் மக்கள்தொகை மாற்றங்கள் மற்றும் ஊடுருவல் குறித்த அரசியல் விவாதங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு சுதந்திர தின உரையில் பிரதமர் நரேந்திர மோடி, சட்டவிரோத ஊடுருவலின் விளைவுகள் மற்றும் மக்கள்தொகை மாற்றங்களை ஆய்வு செய்ய குழு அமைக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்ட அறிக்கையின் படி, ஓய்வு பெற்ற நீதிபதி பிரகாஷ் நவால்கர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. உறுப்பினர்களாக மக்கள் தொகை கணக்கெடுப்பு கமிஷனர், உத்தர பிரதேச முன்னாள் தலைமைச் செயலர் துர்கா சங்கர் மிஸ்ரா, முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி பாலாஜி ஸ்ரீவத்ஸவா, பொருளாதார நிபுணர் டாக்டர் ஷமிகா ரவி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். உறுப்பினர் செயலராக மத்திய உள்துறை அமைச்சகத்தின் வெளிநாட்டு பிரிவு செயல்படும்.

எல்லைப் பகுதிகள் மற்றும் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் ஊடுருவல் உள்ளிட்ட காரணங்களால் ஏற்பட்டுள்ள மக்கள்தொகை மாற்றங்களை குழு விரிவாக ஆய்வு செய்யும். மதம் மற்றும் சமூகக் குழுக்களுக்கிடையே காணப்படும் மக்கள்தொகை பெருக்கத்தின் போக்கையும் மதிப்பிட்டு, திட்டமிட்ட காலக்கெடுவுடன் தீர்வுகளை பரிந்துரைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊடுருவல் மற்றும் பிற காரணங்களால் உருவாகும் மக்கள்தொகை மாற்றம் நாட்டின் எதிர்காலத்திற்கு சவாலாகும் என்றும், இது இறையாண்மை, பாதுகாப்பு, சட்டம்-ஒழுங்கு, சமூக ஸ்திரத்தன்மை மற்றும் பழங்குடியினர் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு ஆபத்தாக இருக்கலாம் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.