அமராவதி: ஆந்திரப் பிரதேச துணை முதல்வரும் நடிகருமான பவன் கல்யாண், தமிழக முதல்வர் விஜயின் வேகமான அரசியல் உயர்வை பார்த்தால் தனக்கு “பொறாமை” ஏற்படுகிறது என வெளிப்படையாக கூறியுள்ளார்.
கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் நடந்த ஜனசேனா கட்சி கூட்டத்தில் பேசிய அவர், சமீப காலமாக தமிழக அரசியலை கவனித்து வருவதாக தெரிவித்தார். அங்கு நடந்த சட்டசபை தேர்தலில் ஒரு கட்சி பெரிதான சிரமமின்றி வென்று ஆட்சியை அமைத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
விஜய் அல்லது அவரது கட்சியின் பெயரை நேரடியாக சொல்லாமல், கட்-அவுட், பேனர்கள் போன்றவற்றின் மூலம் வெற்றி பெற்று முதல்வராகும் நிலையை பார்க்கும்போது பொறாமை தோன்றுவதாக கூறினார். இதற்கு மாறாக, தாம் ஆந்திராவில் சுமார் 15 ஆண்டுகளாக தெரு தெருவாகச் சென்று களத்தில் நின்று போராடியும் அதுபோன்ற வெற்றியை பெற முடியவில்லை எனவும் அவர் சொன்னார்.
அரசியல் கட்சியை நடத்துவது என்பது லட்சக்கணக்கான மக்களை ஒன்றிணைப்பதைப் போன்ற கடினமான பணியென கூறிய பவன் கல்யாண், மக்களின் எதிர்பார்ப்புகளை புரிந்து கொண்டு, எந்த விஷயத்தையும் அறிந்து தெளிவாக பேச வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இதற்கு முன்பு, தன்னை தமிழக முதல்வர் விஜயுடன் ஒப்பிட வேண்டாம் என தனது ஆதரவாளர்களிடம் அவர் கேட்டுக் கொண்டதாகவும், தமிழக அரசியல் சூழலும் ஆந்திர சூழலும் வேறுபடும் என்றும் அவர் கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





