இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நான்கு நாடுகள் சேர்ந்த ‘குவாட்’ கூட்டமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் டில்லியில் சந்தித்து, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ராணுவ நடவடிக்கைகள் தொடர்பான கவலைகள் பின்னணியில் சில முக்கிய முடிவுகளை எடுத்தனர்.

கூட்டத்துக்குப் பின் வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கையில், இந்தோ-பசிபிக் பகுதி சுதந்திரமாகவும் வெளிப்படையாகவும் இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியதுடன், நாடுகள் தங்களின் சொந்த முடிவுகளை எடுக்கக் கூடிய திறனை வலுப்படுத்தவும், மீள்திறனை வளர்க்கவும் உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்தது.

பிராந்தியம் முழுவதும் கடல்சார் கண்காணிப்பை (maritime domain awareness) மேம்படுத்தவும், முக்கிய கனிமங்கள் மற்றும் எரிசக்தி துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும் குவாட் நாடுகள் ஒப்புக் கொண்டன. இந்தோ-பசிபிக் எரிசக்தி பாதுகாப்பு முன்னெடுப்பின் ஒரு பகுதியாக முக்கிய கனிமங்கள் தொடர்பான கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கூறினார்.

கிழக்கு மற்றும் தென் சீனக் கடல் பகுதிகளில் ஏற்பட்டுள்ள இடையூறுகள் குறித்தும் அறிக்கை கவலை தெரிவித்தது. தென் சீனக் கடலில் பிற நாடுகளை அச்சுறுத்தும் அல்லது பிராந்திய அமைதியை பாதிக்கும் ராணுவ நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றும், கடல்சார் வள மேம்பாடுகளில் தலையீடு, கப்பல்/விமானப் போக்குவரத்தின் சுதந்திரத்தை முடக்கும் முயற்சிகள், ராணுவ விமானங்கள் மற்றும் கடலோரக் காவல் படை மூலம் அச்சுறுத்தும் நகர்வுகள் கண்டனத்துக்குரியவை என்றும் குறிப்பிடப்பட்டது.

மேலும், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நடைபெறும் சர்வதேச வர்த்தகத்திற்கு இடையூறு இருக்கக் கூடாது எனக் கூறிய குவாட், அப்பகுதியில் வர்த்தக சரக்கு கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்க ஈரான் எடுத்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. பயங்கரவாதம் நாடுகளுக்கிடையே பொதுவான அச்சுறுத்தல் எனக் கூறி, அதை வேரறுப்பதில் ‘பூஜ்ஜிய சகிப்புத்தன்மை’ பின்பற்றப்படும் என்றும், தாக்குதல்களில் இருந்து தற்காத்துக் கொள்ள ஒவ்வொரு நாட்டுக்கும் முழு உரிமை உள்ளது என்றும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.