‘காந்தாரா’ திரைப்படம் தொடர்பான புகார் வழக்கில் உயர்நீதிமன்றத்தில் அளித்த உறுதிமொழிப்படி, பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் மைசூரு சாமுண்டி மலையில் உள்ள சாமுண்டீஸ்வரி கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து மன்னிப்பு கேட்டார்.
கடந்த ஆண்டு கோவாவில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் அவர் பேசிய போது, காந்தாரா படத்தில் வரும் தெய்வக் கதாபாத்திரத்தை விமர்சிக்கும் வகையில் முகபாவனை காட்டியதாக கூறப்பட்டு, இதற்கு கன்னடர்கள் தரப்பில் எதிர்ப்பு எழுந்தது. இந்த படம் இயக்குநரும் நடிகருமான ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்தது.
இதையடுத்து பெங்களூரு ஹைகிரவுண்ட் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. ரன்வீர் சிங் சமூக வலைதளத்தில் மன்னிப்பு கேட்டிருந்தாலும், வழக்கு நீதிமன்றம் வரை சென்றது. விசாரணைகளுக்குப் பிறகு, சாமுண்டி மலையில் உள்ள கோவிலுக்கு சென்று சாமுண்டீஸ்வரி அம்மனிடம் மன்னிப்பு கேட்பதாக நடிகர் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதை ஏற்ற நீதிமன்றம், ஒரு மாதத்துக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.
அதன்படி நேற்று காலை முககவசம் அணிந்து சாமுண்டி மலைக்கு வந்த ரன்வீர் சிங், முதலில் கோவில் முன் உள்ள விநாயகரை வழிபட்டு பின்னர் சாமுண்டீஸ்வரி தேவியை தரிசித்தார். சுமார் 10 நிமிடம் வரை அமர்ந்து பிரார்த்தனை செய்த பின் அவர் அங்கிருந்து சென்றதாக தெரிவிக்கப்பட்டது. சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் பரவிய பின்னரே பலருக்கும் இந்த வருகை தெரியவந்தது.
சாமுண்டீஸ்வரி ஷேத்திர மேம்பாட்டு ஆணைய செயலர் ரூபா கூறுகையில், நடிகர் காலை 7:30 மணியளவில் சாதாரண பக்தர் போல வந்ததாகவும், கோவில் ஊழியர்கள் மாலை அணிவித்து வரவேற்றதாகவும், அவர் சிறிது நேரம் பிரார்த்தனை செய்ததாகவும் தெரிவித்தார்.





