பெங்களூரு: கர்நாடகத்தில் முதல்வர் பதவி தொடர்பான குழப்பம் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. துணை முதல்வர் டி.கே. சிவகுமாருக்கு வழிவிடும் வகையில் முதல்வர் சித்தராமையா “கொள்கை அளவில்” ஒப்புதல் அளித்ததாக கட்சி வட்டாரங்களில் தகவல் பரவி வருகிறது.

இந்த விவகாரத்தில் நிலவும் இழுபறிக்கு முற்றுப்புள்ளி வைக்க காங்கிரஸ் மேலிடம் இருவரையும் டெல்லிக்கு அழைத்ததாக கூறப்படுகிறது. சித்தராமையாவும் சிவகுமாரும் தங்களது ஆதரவாளர்களுடன் தனித்தனி விமானங்களில் டெல்லி சென்றதாக தகவல்.

டெல்லி காங்கிரஸ் அலுவலகத்தில், கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பொதுச்செயலர் கே.சி. வேணுகோபால், கர்நாடக பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா ஆகியோர் சித்தராமையாவுடன் ஆலோசனை நடத்தினர். பின்னர் சிவகுமாருடன் தனியாகவும், அதன்பின் இருவரையும் நேருக்கு நேர் அமர வைத்து கூட்டு பேச்சுவார்த்தையும் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வந்து, சித்தராமையாவை தனியாக அழைத்து அரை மணி நேரத்துக்கும் மேலாக பேசினார்.

பேச்சுவார்த்தைக்கு பின், வேணுகோபால் செய்தியாளர்களிடம், ராஜ்யசபா மற்றும் கர்நாடக மேல்சபை தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வு குறித்து மட்டுமே ஆலோசித்ததாகவும், “ஊகங்களுக்கு இடமில்லை” என்றும் தெரிவித்தார். சித்தராமையாவும் சிவகுமாரும் ஊடகங்களுக்கு பேட்டி அளிக்காமல் தனித்தனி கார்களில் புறப்பட்டனர்.

ஆனால் கட்சி வட்டாரங்களில் பரவும் தகவலின்படி, முதல்வர் பதவியை விட்டுத்தந்தால் சித்தராமையாவுக்கு ராஜ்யசபா எம்.பி. பதவி வழங்கப்படும் என்றும், அவரது மகன் யதீந்திராவுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படும் என்றும் ராகுல் உறுதி அளித்ததாக கூறப்படுகிறது. இதை முதலில் மறுத்த சித்தராமையா பின்னர் ஒருவழியாக ஒப்புக்கொண்டதாகவும், அடுத்த சில நாட்களில் மேலிடம் முடிவு அறிவிக்கும் வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.