சென்னை: அ.தி.மு.க.வில் அதிருப்தியடைந்த சில எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்வதற்கான பின்னணியில், உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞரும் காங்கிரஸ் ராஜ்யசபா எம்.பி.யுமான அபிஷேக் மனு சிங்வி இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

மே 4-ஆம் தேதி சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சிங்வியை உடனடியாக சென்னை அனுப்பியதாகவும், அவரது ஆலோசனையின் அடிப்படையில் வி.சி.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவுடன் முதல்வர் விஜய் அரசு அமைத்ததாகவும் அந்த தகவல் கூறுகிறது.

மேலும், “பெரும்பான்மைக்கு தேவையான ஆதரவு உறுதியான பிறகே ஆட்சி அமைக்க அழைப்பு விடுப்பேன்” என கவர்னர் ராஜேந்திர அர்லேக்கர் தெரிவித்ததாகவும், அதற்கு சிங்வி கடும் எதிர்ப்பு தெரிவித்து, தெளிவான பெரும்பான்மை இல்லாத சூழலில் அதிக இடங்களில் வென்ற கட்சியையே முதலில் அழைக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுத்ததாகவும் குறிப்பிடப்படுகிறது.

கம்யூனிஸ்ட் கட்சிகள் எந்த நேரத்திலும் நெருக்கடி தரக்கூடும் என்ற கணிப்பின் பின்னணியில், த.வெ.க. தனது எம்.எல்.ஏ. எண்ணிக்கையை உயர்த்தும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. ராஜினாமா செய்யப்பட்ட தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தலில் வென்று 118 என்ற எண்ணிக்கையைத் தாண்டினால், ஐந்து ஆண்டுகள் அரசு நிலைத்திருக்கும் வகையில் பலம் பெறும் என சிங்வி ஆலோசனை வழங்கியதாகவும், அதன்படி முதல்வர் விஜய் செயல்படுவதாகவும் அந்த தகவல் தெரிவிக்கிறது.

இந்த அதிரடி அரசியல் நகர்வு அ.தி.மு.க. மட்டுமல்லாமல் தி.மு.க. மற்றும் பா.ம.க. ஆகிய கட்சிகளையும் அதிர வைத்துள்ளதாகவும், தி.மு.க. சின்னத்தில் வென்ற கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் சிலரும், தி.மு.க. உள்ளேயும் சிலரும் ஆளும் தரப்பின் வலையில் சிக்கக்கூடும் என்ற அச்சம் தி.மு.க. தரப்பில் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.