மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை இணையமைச்சர் சுரேஷ் கோபி, நடிகர் விஜய்க்கு கேரளாவிலும் உட்பட எங்கு வேண்டுமானாலும் கட்சியை விரிவாக்க உரிமை இருப்பதாக கூறினார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்கள் எதிர்பார்ப்புடன் வாய்ப்பளித்துள்ளதால் விஜய் பணியாற்றட்டும்; நன்றாக செயல்பட வேண்டும் என்றார்.
எரிபொருள் விலை உயர்வு குறித்து, கடந்த இரண்டு முதல் மூன்று மாதங்களில் பொதுத்துறை நிறுவனங்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்யும் நோக்கில் இந்த உயர்வு செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார். சமூக நலன் கருதி யாரும் பாதிக்கப்படக்கூடாது என்பதே அரசின் நோக்கம் என்றும், இந்த விலை உயர்வு எத்தனை நாள் நீடிக்கும் என்பதைத் துல்லியமாகச் சொல்ல முடியாது என்றும் கூறினார்.
தற்போது நடைபெறும் போர் எவ்வளவு நாள் நீடிக்கும் என்பது தெரியாது; போரை யாரும் விரும்பவில்லை என்பதே உண்மை எனவும் அவர் குறிப்பிட்டார். பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.150 வரை செல்லும் என மக்களை பயமுறுத்த வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.
மத்திய அரசு விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் நன்மை தரும் திட்டங்களையே செயல்படுத்தி வருவதாகவும், அவசியம் இல்லாமல் எதையும் இலவசமாக வழங்கவில்லை என்றும் அவர் கூறினார். வந்தே பாரத் ரயில்கள் அமெரிக்காவிற்கு இணையான வசதிகளை வழங்குவதாகவும் பாராட்டினார்.
மேலும், கேரளாவில் பா.ஜ.க. தற்போது மூன்று இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாக கூறிய அவர், இதைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை; எதிர்காலத்திலும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையையும் தெரிவித்தார். கோவையில் பெட்ரோலியப் பொருள் விநியோகம் மற்றும் எரிவாயு குழாய் பதிக்கும் பணிகள் தொடர்பாக ஆய்வுகள் நடத்தியதாகவும் கூறினார்.





