சென்னை: தமிழக காவல் துறையின் புதிய காவல் தலைமை இயக்குநர் (டிஜிபி) நியமனத்திற்காக, மூன்று மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளின் பெயர்களை யுபிஎஸ்சி (மத்திய அரசு பணியாளர் தேர்வு வாரியம்) தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
தற்போதைய டிஜிபி சந்தீப்ராய் ரத்தோட், ஏப்ரலில் சட்டசபை தேர்தல் காலத்தில் தேர்தல் கமிஷன் மூலம் நியமிக்கப்பட்டவர். புதிய டிஜிபி தேர்வுக்கான பரிசீலனை பட்டியலிலும் அவரது பெயர் இடம்பெற்றிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய டிஜிபி தேர்வுக்கான இறுதி ஆலோசனை கூட்டம் டில்லியில் உள்ள யுபிஎஸ்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் தலைமைச் செயலர் சாய்குமார் மற்றும் உள்துறை செயலர் மணிவாசன் பங்கேற்றனர்.
தமிழக அரசு சார்பில் 11 மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய பட்டியல் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், அதனை பரிசீலித்த யுபிஎஸ்சி, காவல் உயர் பயிற்சியகத்தின் டிஜிபியாக உள்ள ராஜிவ்குமார், தற்போதைய டிஜிபி சந்தீப்ராய் ரத்தோட் மற்றும் மத்திய அரசு பணியில் உள்ள டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் ஆகிய மூன்று பெயர்களை இறுதி செய்து பரிந்துரை செய்துள்ளது.
இந்த மூவரில் ஒருவரை தமிழக அரசு புதிய டிஜிபியாக நியமிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





