பிரதமர் நரேந்திர மோடியை விரைவில் ஆஸ்திரேலியாவில் வரவேற்கும் வாய்ப்பு கிடைக்க உள்ளதாக அந்நாட்டு பிரதமர் அந்தோனி அல்பானீஸ் மகிழ்ச்சி தெரிவித்தார்.
ஆஸ்திரேலிய பார்லிமென்டில் உரையாற்றிய அல்பானீஸ், பிரதமராக இருந்த காலத்தில் இந்தியாவுக்கு மேற்கொண்ட இரண்டு பயணங்களும் தனக்கு பெருமையாக இருந்ததாக கூறினார். இதன் தொடர்ச்சியாக, மோடியை மீண்டும் ஆஸ்திரேலியாவில் வரவேற்க ஆவலுடன் இருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்த பயணம் இந்திய-ஆஸ்திரேலிய சமூகத்தினருக்கு முக்கியமானதாக அமையும் என்றும், உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இந்தியா இருப்பதையும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் இரு நாடுகளின் பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகள் மேம்பட்டுள்ளதாக கூறிய அல்பானீஸ், கலாசாரம் மற்றும் கல்வி துறைகளிலும் இரு நாடுகள் இணைந்துள்ளதாக தெரிவித்தார். இந்த அறிவிப்பை எம்.பி.க்கள் கைதட்டி வரவேற்றனர்.





