கோல்கட்டா
மேற்கு வங்கத்தில் பாஜ தலைமையில் புதிய அரசு அமைந்துள்ள நிலையில், மாநிலத்தில் சட்டவிரோதமாக குடியேறியதாக கூறப்படும் வங்கதேசத்தவர்கள் சொந்த நாட்டிற்கு திரும்ப எல்லை பகுதிகளில் குவிந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேர்தல் பிரசாரத்தின் போது சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்றுவோம் என பாஜ தெரிவித்திருந்ததாகவும், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் இதே கருத்தை முன்வைத்ததாகவும் கூறப்படுகிறது. சட்டசபை தேர்தல் வெற்றிக்குப் பிறகு சுவேந்து அதிகாரி தலைமையில் பாஜ அரசு அமைந்தது.
ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு, சிலர் தங்களின் உடைமைகள் மற்றும் அடையாள ஆவணங்களுடன் வங்கதேச எல்லையை நோக்கி பயணம் செய்வதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்காக ஹக்கிம்பூர் சோதனைச்சாவடியில் வரும் நபர்களின் விவரங்களை போலீசார் பதிவு செய்து வருகின்றனர். முகாம்களில் தங்க வைப்பதற்கு முன் அவர்களின் ஆவணங்களும் சரிபார்க்கப்படுகின்றன.
கடந்த சில நாட்களில் சுமார் 350 பேரின் தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கோல்கட்டாவின் பல பகுதிகளில் இருந்து 60-க்கும் மேற்பட்டோர் எல்லை பகுதிகளை நோக்கி சென்றுள்ளதாகவும், வேலை தேடி தரகர் அல்லது ஏஜென்ட்களுக்கு பணம் கொடுத்து சட்டவிரோதமாக இந்தியாவுக்கு வந்ததாகவும் அவர்கள் தெரிவித்ததாகவும் தகவல். சமீப மாதங்களில் சோதனை, ஆவண சரிபார்ப்பு மற்றும் தடுப்பு முகாமில் வைக்கப்படுவோம் என்ற அச்சம் காரணமாக நாடு திரும்புவதாகவும் கூறப்படுகிறது.





