பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில், நாடு முழுவதும் பொதுவினியோக முறையை (PDS) வலுப்படுத்தி டிஜிட்டல் மயமாக்கும் “சார்தக் பி.டி.எஸ்.” திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 16வது நிதிக்குழுவின் பதவிக்காலத்திற்குள் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்திற்கு மத்திய அரசின் பங்காக ரூ.25,630 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது; திட்டம் 2031 வரை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், இது வினியோக அமைப்பில் கட்டமைப்பு ரீதியான மேம்பாடுகளை நோக்கமாகக் கொண்டது என்றும், தற்போதுள்ள ரேஷன் வழங்கும் நடைமுறையில் மாற்றம் இருக்காது என்றும் தெரிவித்தார். போக்குவரத்து, தளவாட மேலாண்மை மற்றும் பொருட்கள் கையாளுதல் ஆகியவை நவீனப்படுத்தப்பட்டு செயல்திறன் உயர்த்தப்படும் என்றார்.
திறன், வெளிப்படைத்தன்மை மற்றும் மக்கள் பங்களிப்பை அதிகரிக்க மூன்று முக்கிய துாண்களின் அடிப்படையில் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. “நிர்மல்” என்பது செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான நிகழ்நேர பயனாளர் பதிவேடு; இது மத்திய துறைகளுடன் நேரடியாக இணைக்கப்பட்டு தகுதியானவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் சென்று சேர உதவும் என கூறப்பட்டது.
“ஆஷா” என்பது பன்மொழிகளில் இயங்கும் AI குறைதீர்ப்பு மற்றும் தொடர்பு தளம்; இது வாட்ஸ்அப் மற்றும் சாட்பாட் சேவைகளுடன் இணைக்கப்பட்டு நாள்தோறும் மூன்று லட்சம் புகார்கள் மற்றும் கருத்துப் பரிமாற்றங்களை கையாளும் வகையில் உருவாக்கப்படுகிறது. “சாக்ஷம்” என்பது வினியோக நிர்வாகத்தை மேம்படுத்தும் AI தளம்; வாகன கண்காணிப்பு, க்யூஆர் கோடு அடிப்படையிலான கண்காணிப்பு மற்றும் உணவு தானிய தேவையை முன்கூட்டியே கணிக்கும் கருவிகள் இதில் இடம்பெறும்.
மத்திய அரசின் கணிப்பின்படி, இந்த நவீன தளவாட மேலாண்மை மூலம் உணவு தானிய போக்குவரத்துக்கான பயண துாரம் 15% முதல் 50% வரை குறையக்கூடும்; இதனால் செயல்பாட்டு திறன் உயரும், போக்குவரத்து செலவும் குறையும். AI, மெஷின் லேர்னிங், கணினி மொழி செயலாக்கம் மற்றும் பிளாக்செயின் போன்ற தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வினியோக முறையை நவீனப்படுத்துவதே திட்டத்தின் நோக்கம் என்றும், தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பயன்பெறும் 81.35 கோடி பயனாளிகளின் உணவு பாதுகாப்பை இது ஆதரிக்கும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.





