புதுடில்லி: சிபிஎஸ்இ தேர்வு தொடர்பான விவகாரத்தில் மாணவர்கள் சந்தித்த சிரமங்களுக்கு தானே பொறுப்பு ஏற்கிறேன் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.
டில்லியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த விவகாரம் குறித்து சிபிஎஸ்இ ஏற்கெனவே விளக்கம் அளித்துள்ளதாக கூறினார். முறைகேடுகள் கண்டறியப்பட்டால், பொறுப்பாளர்கள் தப்பிக்க முடியாது என்றும் உறுதி அளித்தார்.
மேலும், இது அரசியல் செய்ய வேண்டிய நேரமல்ல எனக் கேட்டுக்கொண்ட அவர், மாணவர்கள் மற்றும் தேர்வர்களின் மன அழுத்தம் மேலும் அதிகரிக்காமல் இருப்பதே இப்போது முக்கியம் என்றார். யாருடைய வார்த்தைகளோ அல்லது நடத்தையோ மன அழுத்தத்தை உயர்த்தக்கூடாது என்றும் வலியுறுத்தினார்.
பின்னணி: இந்த ஆண்டு சிபிஎஸ்இ பிளஸ் 2 விடைத்தாள்கள் டிஜிட்டல் முறையில் மதிப்பீடு செய்யப்பட்டன. எதிர்பார்த்ததை விட மதிப்பெண்கள் குறைவாக வந்ததாக பல மாணவர்கள், பெற்றோர் சந்தேகம் எழுப்பினர். எங்கு மதிப்பெண்கள் குறைக்கப்பட்டன என்பதை அறிய ஸ்கேன் பிரதிகளுக்கு விண்ணப்பிக்க முயன்றபோது சிபிஎஸ்இ இணையதளம் செயலிழந்ததாக கூறப்படுகிறது. இதனால் மாணவர்கள் சிக்கல்களை எதிர்கொண்ட நிலையில், பிரச்னையை தீர்க்க சென்னை ஐஐடி மற்றும் ஐஐடி கான்பூருக்கு மத்திய அரசு உத்தரவிட்டது.
இதுகுறித்து காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, சிபிஎஸ்இ தேர்வு முடிவுகளில் முறைகேடுகள் நடந்தது தவறு மட்டுமல்ல; அது திட்டமிட்ட சதி என குற்றம்சாட்டியதாக செய்தி தெரிவிக்கிறது.





