தமிழகத்தின் முக்கிய உட்கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என முதல்வர் விஜய், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து வலியுறுத்தினார். இதில் ரயில்வே, நெடுஞ்சாலை மற்றும் மெட்ரோ ரயில் தொடர்பான திட்டங்கள் இடம்பெற்றன.
புதுடில்லி சென்றுள்ள முதல்வர் விஜய், இதற்கு முன் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து தமிழக நலன் குறித்த மனுவை அளித்தார்.
அதனைத் தொடர்ந்து நிர்மலா சீதாராமனை மரியாதை நிமித்தமாக சந்தித்த அவர், தமிழக வளர்ச்சியை மேலும் ஊக்குவிக்கும் வகையில் துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள், ரயில்வே திட்டங்கள் மற்றும் தொழில் வழித்தடங்களுக்கு முன்னுரிமை அளித்து நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டுமென கேட்டுக் கொண்டார்.
மேலும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்களை நிறுவ வேண்டும் என்றும், ஓசூர், கோவை, மதுரை நகரங்களில் பொதுப் போக்குவரத்தை மேம்படுத்த மெட்ரோ ரயில் திட்டங்களை செயல்படுத்த தேவையான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.





