கோவையில் மின்சார வாகனங்களின் விற்பனை கணிசமாக உயர்ந்து வருகிறது. கடந்த நான்கரை மாதங்களில் ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் 5,268 மின் இருசக்கர வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன.
ஈரான்–அமெரிக்கா மோதல் காரணமாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு நிலவுவதாக கூறப்படும் நிலையில், எரிபொருள் சிக்கன நடவடிக்கைகளை கடைபிடிக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதன் பின்னணியில், பெட்ரோல் வாகனங்களுக்கு மாற்றாக மின் வாகனங்களை வாங்கும் ஆர்வம் அதிகரித்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வாகன முகவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தகவலின்படி, ஏப்ரல் மாதத்தில் மட்டும் நாட்டளவில் மின் வாகன விற்பனை சுமார் 40% உயர்ந்துள்ளது; உற்பத்தியும் இரு மடங்காக அதிகரித்துள்ளது. வாரன்டி, அதிக மைலேஜ் போன்ற அம்சங்களால் இ-பைக் களை முன்பதிவு செய்து, தாமதமானாலும் காத்திருந்து வாங்கும் நிலை இருப்பதாகவும் கூறப்படுகிறது.
சரக்குகளை எடுத்துச் செல்லும் தேவைக்காக தொழில் நிறுவனங்கள் பேட்டரி வாகனங்களை அதிகம் வாங்குகின்றன. கோவை மாவட்டத்தில் மின் இருசக்கர வாகன விற்பனை மேலும் உயரும் என வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பதிவு விவரங்களின்படி, கடந்த ஆண்டு கோவை மாவட்டத்தில் 7,430 இருசக்கர வாகனங்கள், 1,681 இலகுரக வாகனங்கள் மற்றும் 352 இதர வாகனங்கள் பதிவு செய்யப்பட்டன. இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் தற்போது வரை 5,268 இருசக்கர வாகனங்கள், 1,030 இலகுரக வாகனங்கள் மற்றும் 269 இதர வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.




