காங்கோவில் எபோலா வைரஸ் தொற்று தீவிரமடைந்து வருகிறது. உகாண்டா உள்ளிட்ட அருகிலுள்ள ஆப்ரிக்க நாடுகளிலும் பரவல் காணப்படுவதால், பிற நாடுகளுக்கும் பரவும் அபாயம் இருப்பதாகக் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொற்று அதிகரிப்பைத் தொடர்ந்து, உலக சுகாதார நிறுவனம் (WHO) பிற நாடுகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. கிடைத்த தகவலின்படி, ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 220 பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகளாவிய பொது சுகாதார அவசரநிலையாக அறிவிக்கப்பட்டுள்ள இந்தப் பரவலைக் கட்டுப்படுத்த காங்கோ மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக, இந்தியா அவசர மருத்துவப் பொருட்களை அனுப்பி உதவியுள்ளது.

நோய் கண்டறியும் கருவிகள், சிகிச்சை தொடர்பான பொருட்கள் மற்றும் நோய்த்தொற்றுக் கட்டுப்பாட்டு உபகரணங்கள் அடங்கிய இந்த உதவிப் பொருட்கள் கிடைத்ததை ஆப்ரிக்க நோய்க் கட்டுப்பாட்டு மையம் (Africa CDC) உறுதிப்படுத்தியுள்ளது. இவை பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விரைவில் விநியோகிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசு மற்றும் மக்களின் நன்கொடையாக வழங்கப்பட்ட உதவிக்கு Africa CDC நன்றி தெரிவித்ததுடன், உயிர்களைப் பாதுகாப்பதற்கும் சுகாதாரப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் இந்தியா தொடர்ந்து ஆதரவு வழங்கி வருவதாகவும் கூறியுள்ளது.