அமெரிக்கா மேற்கொண்டதாக கூறப்படும் தாக்குதலுக்கு பதிலடியாக, குவைத் மீது ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து பிப். 28 முதல் தொடங்கிய போர், அமைதி ஒப்பந்த பேச்சுவார்த்தைக்காக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், ஹார்முஸ் ஜலசந்தி அருகே உள்ள ஈரானின் துறைமுக நகரமான பந்தர் அப்பாஸ் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தற்காப்புத் தாக்குதல்கள் நடத்தியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக, ஈரான் குவைத் நோக்கி ஏவுகணை மற்றும் ட்ரோன்களை ஏவியதாக கூறப்படுகிறது. குவைத் ராணுவம், தங்களின் வான் பாதுகாப்பு அமைப்புகள் ட்ரோன்களை இடைமறித்ததாக தெரிவித்தது. ஆனால் எந்த இலக்கை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது, சேதம் ஏற்பட்டதா என்பதுபோன்ற விவரங்களை வெளியிடவில்லை.
அணுசக்தி கொள்கைகளை கைவிடுமாறு அமெரிக்கா வலியுறுத்தும் நிலையில், தங்கள்மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளை நீக்கி முடக்கப்பட்ட சொத்துகளை விடுவிக்குமாறு ஈரான் கோருகிறது. தடைகளை நீக்க அமெரிக்கா முன்வராததால், மேற்காசியாவில் போர் பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.





