புதுடில்லி: மாநிலங்களுக்கு இடையேயான நீர்த் தகராறுகளை ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் மூலம் தீர்க்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.
வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடைபெற்ற ‘பிரகதி’ கூட்டத்துக்கு பிரதமர் தலைமை தாங்கினார். மத்திய அரசின் செயலாளர்கள் மற்றும் மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுடன் நேரடியாக ஆலோசித்து முன்னேற்றங்களை ஆய்வு செய்தார். ‘பிரகதி’ என்பது 2015-ல் மத்திய அரசு தொடங்கிய ஒருங்கிணைந்த, பல்நோக்கு நிர்வாகத் தளமாகும்.
இந்தக் கூட்டத்தில் ரயில்வே, மின்சாரம், சாலைத் துறைகளைச் சேர்ந்த ஏழு முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்கள் ஆய்வு செய்யப்பட்டன. ஒன்பது மாநிலங்களை உள்ளடக்கிய இத்திட்டங்களின் மதிப்பு சுமார் ரூ.30,000 கோடி என தெரிவிக்கப்பட்டது. திட்டங்களை செயல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டால் செலவு உயர்வதோடு, அத்தியாவசிய வசதிகள் மக்களுக்கு நேரத்தில் கிடைப்பதும் பாதிக்கப்படும் என்று பிரதமர் கூறினார்.
மேலும், மாநிலங்களுக்கு இடையேயான நீர்சார் தகராறுகளை உரிய நேரத்தில் அனுமதி வழங்குதல் மற்றும் தொழில்நுட்ப அடிப்படையிலான கண்காணிப்பு முறைகள் மூலம் விரைவாகத் தீர்க்க மாநிலங்களை அவர் கேட்டுக் கொண்டார்.





